Thursday, January 1, 2009

ஆர். கிருஷ்ணமூர்த்தி என்கிற மாயன்
பெயர்: ஆர். கிருஷ்ணமூர்த்தி

புனைப் பெயர்: மாயன்

இடம் : மதுரை

பிறப்பு: 1933 ஆகஸ்டு 15

1936 தந்தை ரங்கசாமி மறைவு. முகம் நினைவில்லை தாய் ரங்கநாயகி (தாயுமானவர் என்று என்னை குறிப்பிட்டது போல்) தந்தையுமாகி 5 பிள்ளைகள் (நான் கடைசி) + 1 பெண் (என் தங்கை) வளர்ந்து ஆளாக்கி 1982-ல் மறைந்தார்.

படிப்பு:

9 வரை மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி.
10-11 சென்னை மயிலை P.S.High School.
பெனாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைப்பள்ளி-இடை நிலை வகுப்பு .
சென்னை மயிலை விவேகானந்தர் கல்லூரி. முக்கால் முடிந்து நிறுத்தி வேலைக்குச் செல்லும் சூழ்நிலை.

பணி:

தபால் தந்தித் துறையில் 1952-ல் கொச்சியில் சேர்ந்தார்.
1952-1968 கொச்சி, ஆல்வாய், தேனி, கோவில்பட்டி, திண்டுக்கல், திருநெல்வேலி,
வாணியம்பாடி, காஞ்சி என்ற பல மாற்றல்கள் - பல ஆற்றல்கள்
1968-1991 Southern Telecom Projects பணி ஏற்று (முக) All India சுற்றல் பணி நிமித்தம்
ஓய்வு பெற்று வீடுறல்

கவிதை

1957ல் தேனியில் திரு ஆண்டியப்பன் என்பவர் அறிமுகம். நாவுக்கரசன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுபவர். காரைக்குடிக்காரர். கம்பன் கழகத்தில் அங்கம். பல கவியரங்களில் பங்கேற்றுள்ளார் எனத் தெரியவந்தது. (தேனியில் தொலைபேசி இயக்குனராகப் பணியில் சேர்ந்து காரைக்குடியில் தொலைபேசி ஆய்வாளராக ஓய்வு) பெற்றவர், நாங்கள் பழகியதில் என்னுடைய கன்னா பின்னா கவிதைகளைப் படித்துவிட்டு, முறையாக இலக்கண மரபுக் கவிதைகள் செய்யக் கற்றுத்தந்தார். பள்ளயில் எனக்குப் புரியாத தமிழ் இலக்கணம் பட்டென்று புரிந்தது. பல பொருள் பற்றிப் பல கவிதைகள், நான் எழுதியதைப் படித்து மிகவும் மகிழ்ந்து எனக்கு மாயன் என்ற புனைப்பெயர் சூட்டினார். எங்கள் கவிதை உரையாடல்களில் பிறந்த சில கவிதைகள் கண்ணதாசன¤ன் தென்றல் பத்திரிக்கையில் வெளியானது. அதில் ஒன்று 'தாய்' என்று எடுத்து 'சேய்' என்று முடிக்க அழைப்பை ஏற்று, இன்று தமிழ்நாட்டில் சூடு பிடித்து எரியும் இலங்கைப் பிரச்சினை அன்று (1958),

தாய்நாட்டை விட்டுத் தமிழினம் சிங்களப்
பேயின் கீழ் கண்ணீர் பெருக்குவது-மாய்வதென்று
எங்கள் தமிழ்த்தாயே ஏறெடுத்துச் சற்றேபார்
சிங்களத்தில் துன்புறுமுன் சேய்.

என்று எழுதினேன்

நாங்கள் பணிமாற்றலால் பிரிந்தாலும் எங்கள் கடிதத் தொடர்பு கவிதையிலே இருந்தது. செல் வந்த பின் இன்று கடிதமேது? கவிதை ஏது?

கவிதையே வாழ்க்கை என்றின்றி வாழ்க்கையில் கவிதை என்று இருப்பவன் நான். கவிதையில் பிரபலமடைய விருப்பமில்லை.

வீட்டிற்கு வரும் உறவுக்கும் நட்புக்கும் மிகச் சுவையாக விருந்து படைப்பாள் என் மனைவி அதற்காக கல்யாணங்களில் சமையல் செய்ய அனுப்புவதோ - ஹோட்டல் வைத்து நடத்துவதோ என் விருப்பமல்ல.

என் கவிதைகளும் அப்படித்தான்.

வாழ்க தமிழ்

நன்றி. வணக்கம்

பிள்ளையார் சுழி

தும்பிக்கை தொட்டுறங்கும் தொந்திக் கணபதியை
நம்பிக்கை கொண்டிங்கு நாள்தோறும்-கும்பிடுவேன்
உந்தன் துணையின்றி ஓரசைவும் இல்லாது
வந்தெனக்கு யாவும் வழங்கு

நெல்லை கணபதி

ஐயன் நீ அப்பன் நீயே
ஐயப்பன் அண்ணன் நீயே
மெய்யான ஞானம் செல்வம்
மிக்கஅளிப் பவனும் நீயே
செய்யவரும் கடன்கள் யாவும்
சிறப்பாக முடிப்பாய் ஐந்து
கையனே நெல்லை வாழும்
கணபதியுன் நாமம் போற்றி.
எல்லையிலா கருணை பெய்து
இன்பங்கள் சேர்த்து மேலாம்
வல்லமை தந்தே எம்மை
வாழ்விக்கும் தெய்வம் நீயே
கல்லுக்குள் இருந்தே எந்தன்
கண்ணுக்குள் தோன்று கின்ற
நெல்லைகண பதியே, ஐயா
நின்னிரு பாதம் போற்றி

கடவுள் துணை

தொழுது எல்லோருக்கும்
தூயவணக்கம் சொல்லும்
துதிக்கை உடையான் இவன்
கணபதியல்ல
மற்றவர்களுக்குத் தொண்டு செய்து
மகிழ்ந்தே மனம் நிறையும்
வேலை கொண்டான் இவன்
முருகனல்ல
ஆலையில் பணியாற்றும்
இவன் கைவிசையில்
சுழலும் சக்கரத்தால் இவன்
விஷ்ணுவல்ல
இருக்கும் இருகண்ணோடு
ஏழ்மையால் வந்துற்ற இடுக்கண்ணால்
முக்கண்ணன் ஆன இவன்
சிவனல்ல
தூய உளங்கொண்டு பிறாக்குச்செய்
தொண்டே உயிர் மூச்சாக
வாழ்ந்துகாட்டுவன் இங்கு
நான் முன்னுரைத்த நான்கு கடவுளுக்கும்
ஏற்ற துணையாவன் இவன்

பொங்கல் வாழ்த்து

அடிவானம் சிவந்திடவே அடுப்பு மூட்டி
ஆதவனைப் பானையாக ஏற்றி வைக்க
குடியிருந்த வெண்மேகக் கூட்ட மெல்லாம்
குபுக்கென்று வழிந்தது பால் நுரையைப் போல
மடிமீது நமைத் தாங்கும் நிலம டந்தை
மண்மீது பொங்கலிடும் காட்சி நெஞ்சில்
படிகின்ற கவலையெல்லாம் நெருப்பி லிட்ட
பஞ்சுபோல் மறைந்திடப் பொங்கல் வாழ்த்து!

கும்பகோணம்

பாரெங்கும் தேடினேன் பாவி என்னைப்
படைத்திட்டு மெல்லவந்து குடந்தை என்னும்
ஊரிங்கு தங்கிதிருப் பள்ளிகொண்டாய்
உற்றதுணை இருந்தருள உன்னை யன்றி
வேறிங்கு யாருண்டு உறக்கம் விட்டே
விழித்தெழுந்தே எனைக்காப்பாய் வினைகள் தீர்ப்பாய்
சாரங்க பாணியே உன்பொற் பாதம்
சரணென்று தினம்வீழ்ந்து தொழுவேன் நானே

திருவிடைமருதூர்

கருவடைக் குழியிலென்னை மீண்டும் மீண்டும்
கணக்கின்றி பிறக்க வைத்தாய் பாவம் ஒன்றே
அறுவடை செய்தலன்றி மற்ற தொன்றும்
அறிந்திலேன் உய்யும்நாள் எப்போதென்று
ஒருவிடை மொழிந்தென்னை உந்தன் நாமம்
உருபோதும் மறக்காத வண்ணம் காப்பாய்
திருவிடை மருதூரில் தங்கிப் பாரின்
திக்கெட்டும் காந்தருளும் தெய்வம் நீயே

ஒப்பனை

தலைக்கு தைலம் புருவத்திற்கு பென்சில்
கண்ணுக்கு மை உதட்டிற்குச் சாயம்
முகத்திற்குப் பவுடர் மேலாடைக்கு சென்ட்
நெற்றிக்குப் பொட்டு இது ஒப்பனைக்கு முற்றுப்புள்ளி

வயிறு

கடும்பசிக்கு வயிற்றில் ஈரத்துணிவைத்தான்
கட்டிக்கொள்ள வேண்டும், சரி,
துணியெங்கே ..... தண்ணீர்......?
நடமாடும் இஸ்திரி வண்டிக்காரன்
அவன் வயிற்றில் எத்தனை சுறுக்கங்கள்,
ஐயோ!

இரவு

பகலவன்தன் பணிமுடித்தே பதுங்கி மேற்கே
பரந்தநீள் கடல்பாய்ந்து மறைந்தான், வானம்
மகளிர்தம் அதரம்போலச் சிவந்து தோன்றி
மங்கும் அவர் கூந்தலன்ன கருமை எங்கும்
மிகப்படரும் பறவையினம் கூடு நோக்கி
விரைந்துற்றே சேயடையும் கிழக்கே மெல்லப்
புகுமிரவு, விண்மீன்கள் ஒன்றி ரண்டு
புறப்பட்டே கண்சிமிட்டும் பொழுது சாயும்
வெய்யவன் விட்டபணி தொடர்ந்து ஏற்க
விளக்குகள் ஏற்றிவரும், வெளியிற் சென்ற
மெய்யொழுக விளையாடி திரிந்த லைந்து
மேனியெல்லாம் புழுதிபடக் களைத்து ஓய்ந்தே
பையன்கள் வீடடைவர் படிப்பர், உண்பர்
பல்லேறு அலுவல்கள் முடித்து, நாளை
செய்யவரும் கருமங்கள் என்ன வென்றே
சிந்தையுடன் திரும்பிடுவர் பெரியோர் எல்லாம்
பொட்டிட்டுத் தலைசீவிபொலிவு ஏறப்
பொடியொற்றி பூச்சூடி புதிய சேலை
கட்டிவெளி வாயிலில் வந்து நின்றே
கண்ணழைத்து இரைதேடி வலைவி ரித்தே
மட்டற்ற உடற்கட்டு சேலைக் கட்டு
மார்கட்டு தலைக்கட்டு காட்டி யேதம்
கட்டழகை விலைபேசி காசு கொள்வார்
கட்டுகளும் துட்டுகளும் கைகள் மாறும்
வண்ணநீர் அருந்தியே வருத்தம் தீர்க்க
வந்தநல் நேரமேன மக்ழ்ந்தே சென்று
கண்ணாடிக் கோப்பையில் மிதப்பர் நல்ல
கற்பனைக் கோட்டைகள் கட்டி ஆள்வர்
உண்ணுதற்கு உழைத்துவந்த காசி ழப்பர்
உறக்கமும் விழுப்புமற்ற நிலையில் ஆழ்வார்
வின்னவர் பருகமுதம் இதுவோ என்றே
வியந்திடுவர் மயங்கிடுவர் விடிந்தால் சோர்வர்
முளைத்துவரும் பலநூறு விண்மீன் எங்கும்
முகில்சூழும், முழுமதியும் பிறையாயத் தேய்ந்து
இளைத்துவரும் இரவுவந்து ஆட்சி செய்யும்
இல்லத்தோர் பணிமுடித்துப் படுக்கச் செல்வர்
விளக்குகள் அணைந்திருளும் ஆடை மெல்ல
விலக்கியே அணைத்துருளும் உடல்கள் இன்பம்
விளைத்திடும் உறவுவரும் காதல் செய்யும்
வெறியடங்கும் கண்மமூடும் உறக்கம் சேரும்
இசைபாடிச் சிறகடித்தே இரத்தம் தேடி
இனிதுறங்கும் உடல்கடித்தே கொசுக்கள் மேயும்
வசைபாடி முணுமுணுத்தே வாங்கி வைத்த
கொசுவத்திச் சுருள்கொளுத்தி இருமல் கொள்வர்
பசையன்ன உடல்வேர்த்தால் விசிறி தேடும்
பனிபெய்தே குளிரெடுத்தால்பொர்வை மூடும்
தசையெல்லாம் வலிவிழந்து தளர்ந்து பாதிச்
சவமொத்த கிழடுகளின் இருமல் கேடகும்
பிணியுற்றோர் வலிமிகுந்தே பிதற்றல் செய்வார்
பெருங்கடி காரமெங்கோ நேரம் சொல்லி
மணியடிக்கும் தொட்டிலில் கிடந்து றங்கும்
மகவலறும் உடுத்திருக்கும் அழுக்குக் கந்தை
துணிகொண்டே மேல்போத்தி பாதை ஓரம்
சொந்தமிலார் உறக்கத்தில் பசிம றப்பர்
பணிமுடிக்க இராக்காவல் செய்யும் கூர்க்கர்
பருந்தடியால் நிலத்தட்டி விரைந்தே செல்வர்
நள்ளிரவு நகர்ந்தேகும் தெருவில் மக்கள்
நடமாட்டம் குறைந்தறும் நாய்கள் எங்கோ
வள்ளென்று குரைத்தடங்கும் மாற்றுச் சாவி
வைத்திருக்கும் கடிதுழைக்கும் கருத்து இல்லாக்
கள்ளர்கள் குறுக்குவழி பொருளைத் தேடும்
கயவர்கள் செயல்படுவர் கவர்வர் செல்வர்
சுள்ளிகளைக் கொளுத்தியே சூழ்ந்த மர்ந்து
சூடேற்றிக் குறிர்காய்வர் தெருவாழ் மக்கள்
ஆவினம் அம்மாவென் றழைத்தல் கேட்கும்
அடுத்தவரின் வருங்காலப் பலன்கள் யாவும்
கூவியே எடுத்துரைத்து வழிந டத்தும்
குடுகுடுப்பைக் காரனொலி தேய்ந்து ஓயும்
சேவலினம் கூரைமீது தாவி நின்றே
சிறகடித்துக் கொக்கரக்கோ என்று கூவும
பூவினம் மலரும்கீழ் வானில் வெள்ளி
புறப்படும் வெறிச்சமாகும் விடியல் தோன்றும்

மீண்டும் பொங்கல் தையின் சிறப்பு

விந்தை நிறைய வித்தை பெருக
கந்தை மறைய கவிதை மலர
முந்தைத் துயர்கள் முடிந்தே ஒழிய
மந்தை உண்ர்ச்சி மனத்தை அகல
சிந்தை தெளிய நிந்தை நீங்க
தந்தை தாயருள் தரும்துணை ஓங்க
இனியதை நினைப்போம் இயன்றதை முடிப்போம்
நனிஎதையும் ஆய்ந்து நல்லதை ஏற்போம்
சென்றதை மறப்போம் சிறந்ததைத் தேர்வோம்
நின்றதை மீண்டும் தொடர்ந்ததை முடிப்போம்
இன்று தை நன்னாள் இனியநல் வாழ்த்து
நன்றிதை ஏற்பாய் நலம்பெற வாழ்த்து!

மறந்த நினைவு

ஒளியை நினைத்து திரியை மறக்கும்
ஊனர் உலகமடா
உளியை மறந்து சிலையை நினைக்கும்
உலுத்தர் உலகமடா
விதையை மறந்து விளைச்சல் நினைக்கும்
விந்தை உலகமடா
கதையை நினைத்துக் கருவை மறக்கும்
கயவர் உலகமடா
வேரை மறந்து கனியை நினைக்கும்
வீணர் உலகமடா
ஊரை மறந்து வீட்டை நினைக்கும்
ஓட்டை உலகமடா
களைப்பை நினைத்து கடமை மறக்கும்
கள்வர் உலகமடா
உழைப்பை மறந்து உயர்வை நினைக்கும்
ஊழல் உலகமடா
கொள்கை மறந்து கூட்டை நிகனக்கும்
குருட்டு உலகமடா
செல்வம் நினைத்து சீலம் மறக்கும்
சின்ன உலகமடா
இரையை நினைத்து இறையை மறக்கும்
எத்தர் உலகமடா
முறையை மறந்து முடிவை நினைக்கும்
மூடர் உலகமடா
எதையும் மறந்து இதயம் விரும்பும்
எந்தன் உலகமடா

என்ன கவலை?

நீரிலே பிறந்து நீந்தி வாழ்ந்து
ஊர்வீசும் வலைவீழ் மாயும்
மீனுக்கில்லை கவலை-பின்
உனக்கேன் என்ன கவலை?
மலருக்கு மலர்தாவி
மதுவுண்டு மயங்கி மாயும்
வண்டுக்கில்லை கவலை-பின்
உனக்கேன் என்ன கவலை?
தண்ணீரில் நீந்திவாழ்ந்து தரையில்
இரைதேடி பாம்புக கிரையாகும்
தவளைக்கில்லை கவலை-பின்
உனக்கேன் என்ன கவலை?
குறவனின் உண்டி வில்கல்
குறிக்கே இறையாய் மாறும்
குருவிக்கில்லை கவலை-பின்
உனக்கேன் என்ன கவலை?
பிடறியும் கர்ச்சனைப் பெருமையும்
பிடிபட்டால் கூண்டடைத்து மாயும்
சிங்கத்திற்கில்லை கவலை-பின்
உனக்கேன் என்ன கவலை?
நகரத்துச் சந்தைகளில் தோலாக
நகமாக பல்லாக விலைபோகும்
புலிக்கில்லை கவலை-பின்
உனக்கேன் என்ன கவலை?

திருப்பம்

பச்சை மலைபோல் வெண்டைக்காய்கள்
வாங்கிக் கட்டிக் கொண்டேன்
வீட்டில் மனைவியிடம்
பள்ளிச்சீருடை வேண்டுமெனக் கேட்டான்
பையன்; கட்டாயம் இன்று வாங்கவேண்டும்
கடன்!
எங்களது ஏழுவருடக் காதல்
நேற்று திருமணத்தில் முடிந்தது
சென்னையில் எனக்கு; சேலத்தில் அவளுக்கு

சிலேடை - பாம்பும் ஃபிலிமும்

நாங்கள் நால்வர் அரட்டையில் ஈடுபட்ட நேரம்:
நண்பர்களின் ஒருவன், "நான் ஒரு விடுகதை சொல்வேன். விடை சொல்ல முடியுமா" என்றான்
"நீ கதை விடுவதை நிறுத்தி, விடுகதை தொடங்கிவிட்டாய, சரி சொல் என்றேன் நான்.
"பாம்புக்கும் ஃபிலிம் தயாரிப்பாளருக்கும் என்ன ஒற்றுமை" "இரண்டுமே படம் எடுக்கும், அவ்வளவுதான். ஆனால் பாம்புக்கும் ஃபிலிமுக்கும் ஒற்றுமை தெரியுமா, இரண்டும் ஒன்றுதான்" என்றேன்.
உற்ற படம் காட்டும் ஊர்திரட்டும் பெட்டியுறை
சுற்றிவரும் நீண்டு சுருண்டிருக்கும்-கற்றோரும்
'ஆம்' போட்டு செல்வர் அடிபணியும் சென்னையில்
பாமபு ஃபிலிமாகும் பார்.

1. சிலேடை : காக்காய்-சோப்பு

கவிஞரே, ஜால்ரா அடிப்பது என்றால் என்ன?
"அதுவேலை செய்யாமல் பஜனை பாடியே பெயர் ஏடுக்க
எண்ணும் ஊழியரின் செயல்"
"ஐஸ் வைக்கிறான் என்றால் என்ன பொருள்"
"குடைபிடிக்கிற சோம்பேறி, சீக்கிரம் குளிரவைக்கச்
செய்பவன் தந்திரம்"
"சோப்பு போடுதல் என்றால் என்ன? காக்காய்
பிடிப்பதும் அதுவும் ஒன்றா"
"இரண்டுமே ஒன்றுதான். குறிப்பாகச் சொன்னால்
காக்காய்-சோப்பு இரண்டும் ஒன்றுதான்"
"அப்படியா?" "ஆமாம்"
நித்தம் அழுக்கற்றி நீராடும் முன்னுரைக்கும்
மெத்தஎலி உண்ணும் மிகக்கரையும் - வைத்த
அலகிருக்கும் கூடுறையும் ஆய்ந்துரைப்பேன் சோப்பும்
உலகினில் காக்கையும் ஒன்று.

2. சாதிச் சிலேடை

பயிற்சி விடுதியில் நண்பர்கள் நாங்கள் அடுத்து அடுத்த அறைகளில் தங்கிப் பயுற்சி பெற்று
வந்தோம். ஆனால் எல்லோரும் ஏதாவது ஒரு அறைக்கு வந்து கூடி அரட்டையில் ஈடுபடுவோம். ஆனால் படிப்பை அசட்டை செய்யோம்.
பட்டாபிராமன் எனறு ஒரு புதியவர் அங்கு எங்களுக்கு அறிமுகமாகிப் பழகி நண்பரும் ஆனார்.
நல்ல குணம் இனிமையாகப் பேசுவார். வளய வந்து உதவுவார். நெற்றியில் நீறணிந்து
சிவப்பழமாய்த் தோன்றுவார். ஒருநாள் எங்கள் அரட்டையில்
"இந்தப் பட்டாபிராமன் சார் என்ன ஐயரா இல்லை வேறு......."
"அவரையே கேட்டுத் தெரிந்து கொள்ளேன்"-நான்
"சே! அது நன்றாக இருக்காது. இன்னோருவன்
"அவர் ஒரு இந்து, தமிழர் அது போதாதா"-நான்
"நான் ஒன்று சொல்கிறேன். அவர் குளிக்க சென்றிருக்கும்
பொழுது அவர் பெட்டியைத் திறந்து பளளிச் சான்றிதழைப்
பார்த்து தெரிந்து கொள்ளலாமே" - முதல்வன்
"சீ, உன் சாதி புத்திதான் மோசம் என்றால் உன் திருட்டுப்
புத்தி அதைவிட மோசம், படுகேவலம்" - நான்
"பிறகு எப்படி?" - இரண்டாமவன்
நான் "கொஞ்சம் அமைதி கொள்ளுங்கள் அவரோடு நான்
நன்கு பழகியதால் அவர் யார் - என்ன சாதி என்று எனக்குத்
தெரியும். சொல்கிறேன்-கேட்டுக்கொள்ளுங்கள்".
குற்றங்கள் நாடார் குணங்களையே பார்ப்பார்
கற்றோர் சொல் தட்டார் கனிவுடையார்-சற்றேனும்
நன்றி மறவர் நலம் கொல்லர் உள்ளத்தே
என்றுமே பிள்ளை இவர்
அனைவரும் கப்சிப்

அரிய புராணம்

அரியவன் கருடன்மீ தமர்ந்து சென்று
ஆற்றினில் முதலைவாய் அடையக் கண்ட
கரியினை¢ மீட்டுயிர் காத்து மிக்க
கருணைகொண் டருளியே யாரும் காணா
அரியதோர் காட்சிதந்து அடிய வர்க்கு
அன்புக்கும் பக்திக்கும் அடிமை என்ற
பொருளுரைத்துப் புகலிடம் நானே என்று
புலப்படுத்தி நாளும்என் நெங்சில் நின்றான்
அரியாதவ னாகவந்து அவத ரித்து
அகங்காரங் கொண்டசிசு பாலன் தன்னை
அரிந்தவனாய் அவனுடையத் தலையைக் கொய்து
அறிவுறைகள் நூற்றுவர்க்கும் அளித்தான் கேட்டும்
புரியாத மூடர்கள் போர்தொ டுக்கப்
புறப்படத் தொடங்கிட ஐவர் மீது
பரிவாகித் துணைசெய்யும் பணிமேற் கொண்டு
பாரதப் போரில்தேர் பாகன் ஆனான்
அரிபாதி நரன்பாதி யாக வந்து
ஆணவம் தலைக்கேறி ஆட்டுவிக்கும்
நெறிநேர்மை நிலைபடியான் வாயில் தெய்வ
நிந்தனையே சிந்தனையாய் நின்ற நீசன்
இரணியனை அரண்மனைக் கூடத் தூணை
இரண்டாகப் பிளந்தெழும்பி பாய்ந்துப் பற்றி
நெருங்கிடும் அந்திநேரம் தேர்ந்துவாயில்
நிலைப்படியில் மடிவைத்து மடிய வைத்தான்
அரிபாதி அரன்பாதி யாக வந்து
அருட்கோலம் பூண்டதோர் அழகுக் காட்சி
புரிகின்ற தத்துவத்தின் பொருள்வி ளக்கிப்
போதிக்க வென்றேநல் அரனும் மாலும்
சரிசமமாம் இரண்டல்ல ஒன்றே யென்று
சங்கரன் கோவிலில் வந்தெனக்கு
புரியவைத்தே எந்தனின் சிந்தை தீர
பொதுவான தோற்றங்கொண் டெழுந்தான் நின்றான்

காதல் விதி

கனவுகள் பலிக்கு மெனற்£ல்
காதலி தீ கிடைத்திருப்பாய்
நினைவுகள் நிகழ்வா யானால்
நீஎன்கை பிடித்தி ருப்பாய்
வேண்டுதல்கள் விளைக்கு மென்றால்
வீட்டுவிளக் கேற்றி ருப்பாய்
விருப்பங்கள் உருவம் பெற்றால்
விருந்துகள் நடந்தி ருக்கும்
விதிஒன்று உள்ள தாலே
விளைவுகள் வேறு ஆகி
முதியோர்கள் நிச்ச யித்து
முடித்து வைத்த வரனுக்காக
முறையாகக் கழுத்தில் தாலி
முடிந்தமண மகளாய்ப் போனாய்
மண்டபத்தில் கூடி யுள்ள
மற்றவர்க ளுடனே நானும்
மங்கலங்கள் கூறி உன்னை
மனதாற வாழ்த்து கின்றேன்

இறைவா ஏன்?

இயற்கையைப் படைத்தாய் இறைவா
இன்னல்கள் ஏன் படைத்தாய்
நதிகளைப் படைத்தாய் மக்கள்
நடுங்கிடும் வெள்ளத்தை ஏன் படைத்தாய்
மேகங்களைப் படைத்தாய் கண்பறிக்கும்
மின்னல்கள் ஏன் படைத்தாய்
தாகம்தீர மழைபடைத்தாய் மக்கள்
தண்ணீரில் மூழ்கிட ஏன் படைத்தாய்
சூழ்ந்திடும் கடல்படைத்து சுருள்அலை
சுனாமியை ஏன் படைத்தாய்
பூமியைப் படைத்தே உயிர்கொல்
பூகம்பம் ஏன் படைத்தாய்
சூரியனில் ஒளிபடைத்தாய்
சுட்டெரிக்கும் வெய்யில் ஏன் படைத்தாய்
நிலவினைப் படைதது பின்னர்
நித்தமும் தேயவென்று ஏன் படைத்தாய்
காரிருளைப் படைததாய் பொருள்திருடும்
கள்வரை ஏன் படைத்தாய்
இன்னிசை படைத்தாய் இடையில்
இரைச்சலை ஏன் படைத்தாய்
பல்வேறு உயிர்படைத்தாய் பாழும்
பசியினை ஏன் படைத்தாய்
மண்ணிலே உயிர்படைத்து
மரணத்தை ஏன் படைத்தாய்
இறைவனைப் படைத்த மனிதன் இதனை
முறையாய்ச் செய்யவில்லையோ.

காலம்

ஏணிவைத்து வான்மீது ஏறி நிற்கலாம்
இரவில் தெரியும் தாரைகைகள் எண்ணி முடிக்கலாம்
கோணிப்பையில் கடல்முழுதும் கொண்டு நிரப்பலாம்
குக்கல் வாலை மிக்கஎளிதில் நீட்டி நிமிர்த்தலாம்
உடைந்துபோன சட்டிபானை ஒட்ட வைக்கலாம்
உலையில் வெந்த சோற்றை மீண்டும் அரிசியாக்கலாம்
கடந்துபோன காலம்மீண்டும் கணக்கி வராது-இதைக்
கருத்தில்கொண்டு கவனமாகக் கடமைசெய், தம்பி!

கூட்டு

வேட்டைக்கு நாய்களும் விறகிற்குச் சுள்ளிகளும்
கோட்டைக்குக் காவல்களும் கூடவரும் - கேட்டறிவீர்
ஆவி பிரிந்திடுங்கால் அங்கது«£ல் கூடவரும்
பாவபுண்ணி யங்களே யாம்

உறவுக் கயிறு

தொப்பிள் கொடியைத் துண்டித்துப் பிரிக்க
துணைவந் துதவும் முதல் உறவு
எப்பவும் தீயவை தாக்காது அரையில்
இருககும் தாயத்து இடுப்புறவு
சத்தங்களின்றி நித்திரை போகத்
தாலாட்டத் தூளியில் வரும் உறவு
மானம் காக்கும் பாவாடை இடுப்பின்
மடிப்பில் இருத்திக் கொள்ளு முறவு
விரதம் இருந்து நோன்பு முடித்து
கரத்தில் மணிக்கட் டுறுமுறவு
கண்வலை விரிக்கும் காளையரைக் கன்னியர்
அண்ணனெனச் சொல்லிக் கையில் கட்டுறவு
பெண்ணிற்கு மனைவியெனும் பெருமை கூட்ட
எண்ணியே முடிந்துவிட வரும் உறவு
நித்தமும் கிணற்று நீர்சேந்தி வாளி
நிரப்பிக் கொணரவரும் நீள் உறவு
மாடுகன்று கொட்டகையில் மடக்கிக் கட்டி
ஓடவிடாமல் தடுக்க உதவும் உறவு
ஆடைத் தயிரில் வெண்ணெய் கடைய
ஆடும்மத்தை அடக்கும் உறவு
வானம் தொட்டு மேலே உயர
பட்டம் பறக்க வரும் உறவு
முறட்டுக் காளைப் பணியும் விதமாய்
மூக்கில் நுழைந்து வரும் உறவு
ஊரெல்லாம் கோவில் உற்சவ வெற்றிக்குத்
தேரிழுக்க வடமென்று வரும் உறவு
பயணம் போக சாமான் மூட்டை
பாதுகாக்க வெனவரும் உறவு
கம்பங்கள் மேலே கழைக் கூத்தாடி
கும்பிநிறைக் காகூ கொணர் உறவு
அரசியல் கட்சியின் ஆர்ப்பாட்டத் தோரணங்கள்
வரிசையாய்த் தொங்கவிட வரும் உறவு
கோழைத் தனமாய் வாழ்க்கையைத் தானே
குறுகிய முடிச்சில் முடிக்க வரும்
குற்றம் புரிந்து கோர்ட்டின் தீர்ப்பால்
குறுக்கும் முடிச்சு தூக்க வரும்
உயிரற்ற பிணத்தை உயிருள்ள பிணங்கள்
அசைவற்ற சடலம் அசையாதிருக்க
பாடையில் கட்டிப் பயணம் போக
காடுவரை வந்திடும் கடைசி உறவு!!