Friday, July 11, 2008

எதுகை

கன்னல் மொழிபேசும்
மின்னல் இடைகொண்ட
கன்னிஎன் கனவில் வந்தாள் - அந்தப்
பொன்னிற மேனியாள்
செந்நிற மாம்பழக்
கன்னத்துப் புன்னகையில்-ஒரு
சின்னக் குழிதோன்றும்-அது
என்னை மிகவாட்டும்

மேகத்தையும் கரு
நாகத்தையும் ஒத்த
மெ த்த நீள் கூந்தலிடை தீரா
மோகத்தை யூட்டும் நிலா
முகத்தாள் காதல்
தாகத்தை மூட்டிவிட்டாள் -அதன்
வேகத்தால் வீழ்த்தி விட்டாள் - பேரும்
சோகத்தில் ஆழ்த்தி விட்டாள்

வண்ண மலரிடைப்
பண்ணிசைக்கும் மதுக்
கிண்ணத்தில் தேனுறிஞ்சும்-வண்டுக்
கண்ணழகை தினம்
எண்ணியெண்ணி மனம்
புண்ணது கொண்டிடுமுன்- அந்தப்
பெண்ணிங்கு வாராளோ-ஆசை
எண்ணங்கள் தீராளோ.

சிலேடை சந்திரன்-மந்திரி

சித்திரைப் பவுர்ணமி
"தலைவா, மெரினாவுக்குப் போகலாம் வாங்க. சிற்றுண்டிப் பொட்டலங்கள் வாங்கி வந்துளளோம். மெரினா பீச்சில் பவுர்ணமி நிலவை ரசித்துக்கொண்டே பேசுவோம். பேசிக்கொண்டே சாப்பிடுவோம். வாங்க போகலாம் என்று ஓரே குரவில் மூன்று நண்பர்களும் முடிவாக அழைத்தார்கள். இரண்டு வண்டிகள். தட்ட முடியாமல் ஒரு வண்டியின் பின்புறம் ஏறி அமர்நதேன். புறப்பட்டோம். பாதி வழியில் மெரினா செல்லும் சாலைத் தொடக்கத்திலேயே போக்குவரத்துத் தடை, போலீஸ்படை.
"சார் இந்தப்பக்கம் வண்டிகள் போக முடியாது."
"மெரினா பீச்சுககு வேறு எந்த வழியாக போகலாம்."
"எந்தப்பக்கமும் போக முடியாது. போலீஸ் பாதுகாப்பு. மந்திரி திரு சந்திரகாந்த் வருகிறார். மெரினா பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளப் போகிறார்."
என விளக்கினார் காவலர் ஒருவர்.

"கெட்டது போ! சந்தினைப் பார்க்க வந்தால் மந்திரியைப் பார்க்கும்படி ஆச்சே, தலைவா," என அலுத்துக்கொண்டான் நண்பர்களில் ஒருவன்.

"எதைப் பார்த்தால் என்ன? மந்திரி சந்திரகாந்த்தில் நான் சந்திரனைப் பார்க்கிறேன். சந்திரனும் மந்திரியும் வேறு வேறு இல்லை எனக்கு."

"உங்க ரோதனை தாங்க முடியவில்லை. சரி எப்படீன்னு எடுத்துச் சொல்லி ஆளை விடுங்க."

மாலை வரவேற்கும் மக்களெல்லாம் காணவரும்
மேலிருக்கும் எல்லார்க்கு முத்திரவு - ஏலளிக்கும்
கார்சூழும் மற்றும் களங்கமுறும் மந்திரியைத்
தேர்ந்து மதியென்பேன் தீர்ப்பு.

மாலை - Garland - மந்திரி
மாலை - Evening - நிலவு
மதி - நிலவு - Respect
மேலிருக்கும் - High Position - நிலவு - Sky
உத்தரவு - Order முத்திரவு - முத்துப்போல் மிளரும் இரவு
கார் - Car கார் - மேகம்
களங்கம் - ஊழல்கேஸ் களங்கம் - நிலவில்


சிலேடை: குதிரை - ஆறு (RIVER)

சென்னை-கிண்டி குதிரைப் பந்தய மைதானம், என் நண்பன் சந்தானத்தைப் பொறுத்தவரை அது குதிரைப் பைத்திய மயானம்.

"அண்ணே என் ராசி எண் 6. இந்த மாதம் ஜுன் 6. தேதி 6. நாள் வெள்ளிக்கிழமை 6."
"அதனால் என்ன?"
"அதனால் 6ம் நம்பர் குதிரை மேல் பணம் கட்ட போகிறேன்."
"எவ்வளவு"
"500 ரூபாய்"
"600 ரூபாய் ஆகக் கட்டு, அதுவும் ஆறோடு போகட்டும்."
பந்தயம் முடிந்தது. சந்தானம் பணம் கட்டிய குதிரை ஆறாவதாக வந்தது-அவன் ராசி எண்.
"சே, இவ்வளவு மட்டமான குதிரையென்று நான் நினைக்கவில்லை."
"அப்படிச் சொல்லாதே! உன் குதிரையை ஜெயிப்பதற்கு ஐந்து குதிரைகள் தேவைப்பட்டிருக்கு-மறக்காதே."
"அண்ணே, நீங்க முதலில் சொன்ன ஆறோடு போகட்டும்-ஆற்றில் போட்டிருந்தாலும், எங்கேயாவது கரை ஒதுங்கிக் கொஞ்சமாவது திரும்பக் கிடைச்சிருக்கும் சே!, போச்சே!"
"தம்பி சந்தானம்! என்னைப் பொறுத்தவரை ஆற்றில் போட்டாலும் குதிரையில் போட்டாலும் ஒன்றுதான்".

குதிரை - ஆறு விளக்கம்

குதிரைக்குச் முதுகில் சுழியிருக்கும். சுழிப்பார்த்து வாங்கணும்.
ஆறு பெருக்கெடுத்து ஓடம்பொழுது சுழிகள் வரும். கவனம் வேண்டும்
குதிரை வேகமாய் ஓடும் பொழுது வாயில் நுரை பொங்கி வழியும்
ஆறு கரை புரண்டு ஓடும் பொழுது நுரைகள் உண்டாகி மிதக்கும்
குதிரை இளைப்பாற மண்ணில் புரளும். ஆறு ஓடிவரும் வழியில்
மண்ணைப் புறட்டும். பாவேத்தும்-குதிரைப்பற்றிய
ஆற்றைப் பற்றிய - பாடல்கள் புகழும்.
ஆய்ந்த சுழியிருக்கும் அள்ளுநுரை தள்ளிவரும்
பாய்ந்தோடும் மண்புரளும் பாவேத்தும் - சாய்ந்த
கதிரவன் மீண்டும் கடலுதிக்கும் சென்னைக்
குதிரையும் ஆறா குமே.
"அது என்ன, சென்னைக் குதிரை-ஆறு?"
"ஆமாம், தம்பி! சென்னையில் தானே குதிரையும் ஓடுது. கூவம் ஆறும் ஓடுது,
இரண்டும் ஒரே சகதிதான்."
"சரி, இந்தக் குதிரைப் பந்தயத்திற்கு ஒரு வழி சொல்லுங்க. கவிஞரே, நான் விட ஆசைப்படறேன்.
"NO Change"
"ஏன்?"
"அது அப்படித்தான்."
பொடியும் சுருட்டும் புகையிலையும் தீங்கள்
குடியும் விலைமகள் கூட்டும்-முடிவிலாச்
சீட்டு விளையாட்டும் சேர்குதிரைப் பந்தயமும்
வேட்டபின் இல்லை விடல்.

மரங்கள் சிலேடை

பெங்களூரிலிருந்து சென்னைக்குக் காரில் பயணம். பின் இருக்கையில் நான்.
முன்னே ஒட்டுநர் தனியாக. காஞ்சிபுரத்திற்குச் சாலை பிரியும் சந்திப்பைக் கடக்கும் முன், காஞ்சிபுரத்திலிருந்து அசுர வேகத்தில் வரும் லாரி ஒன்று எங்கள் காரைப் பக்கவாட்டில் மோதும் அளவிற்கு மிகச் சமீபமாய் வந்து விட்டது. எனது ஓட்டுநர் ஒரே நொடியில் காரை இடது பக்கம் திருப்பி நெடுஞ்சாலையின் மறுபக்கம் ஒரு சிறிய இறக்கத்தை நோக்கி செலுத்தி முடிவில் சாலை ஓர மரம் ஒன்றில் மிகச்சிறிதாக முட்ட, வண்டி
சேதமில்லாமல் நின்றது. லாரி கடந்து சென்று விட்டது.

ஒரு பெரும விபத்து தவிர்க்கப்பட்டது. காரின் ஜன்னல் வழியே தொலைவில் ஏகாம்பரர் கோவில் கோபுரம் காட்சி. காரின் முன்னே கண்ணாடி வழியே அருகே மரம் தரும் காட்சி. நன்றி மரத்திற்கா இல்லை மனிதர்களிடமிருந்து தப்பிக்க மரத்தடியில் ஒதுங்கியிருக்கும் மகேசனுக்கு
நன்றி! மரங்களுக்கும் தான்.

கடல்நீரி லுப்பையிங்கு கரைத்து வைத்த
கஞ்சிவா ழையன்என் அரசைக் கண்டு
உடல்நீங்கி உயிர்பிரிந்து சென்றி டுங்கால்
உள்ளத்தே இருந்தென்னை உயத்து வீட்டில்
விடல்வேண்டி அம்மாவை அடுத்தி ருக்கும்
வேனால் ஓமறித்த அப்ப னைமெய்
சுடல்செய்யும் கானகத்தில் நின்றே ஆடும்
சூலமுறுங் தையனைநான் தொழுது நின்றேன்

(மரங்கள்: இலுப்பை வாழை அரசு தென்னை மா வேல் ஆல் பனை அத்தி முருங்கை)

தரணி எழு

மகளிர் சங்கத்து மாதரணிவகுத்து
அகவிலை உயர்வுக்குப் போராட்டம்
பக்தரணிவகுத்து கந்தரணி பாடி
பருவமழைக்காகத் தோரோட்டம்
சித்தரணிவகுத்து சீக்குகள் குணமாகச்
செயல்பட நோயாளிக் குயிரூட்டம்
வேந்தரணி வகுத்து வேட்டைக்குச் செல்லும்
விளையாடல் விலங்குகள் கொலையாட்டம்
பித்தரணி வகுத்து அரசியலில் புகுந்ததால்
பொதுமக்கள் அனைவருக்கும் திண்டாட்டம்
இத்தரணி வாழ்வாரின் இன்னல்கள் போய்மறைய
இறைவனிடம் விடைதேடல் என்நாட்டம்

பொங்கல் வாழ்த்து

அடிவானம் சிவந்திடவே அடுப்பு மூட்டி
ஆதவனைப் பானையாக ஏற்றி வைக்க
குடியிருந்த வெண்மேகக் கூட்ட மெல்லாம்
குபுக்கென்று வழிந்தது பால் நுரையைப் போல
மடிமீது நமைத் தாங்கும் நிலம டந்தை
மண்மீது பொங்கலிடும் காட்சி நெஞ்சில்
படிகின்ற கவலையெல்லாம் நெருப்பி லிட்ட
பஞ்சுபோல் மறைந்திடப் பொங்கல் வாழ்த்து!

கண்ணனைய தமிழ்

கண்ணே கண்மணியே கண்ணாளா
கண்ணுக்குக் கண்ணாய்
கண்ணைப்போல் காத்து
கண்ணும் கருத்துமாய்
கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்
கருமமே கண்ணாயினார்
கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கல்
கண்படப் போவுது - கண்திருஷ்டி
கண்ணைப்பார் சிரி
கல்லடி பட்டாலும் கண்ணடி ஆகாது
கண்நிறைந்த கணவன்
கண்கண்ட காட்சி
கண் கொள்ளாக் காட்சி
கண்ணுக்கு மை அழகு
கண்ணெதிரே
கண்ணைக் கவர்ந்தவள்
கண் மண் தெரியாமல்
ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
கண்ணை உறுத்தும்
கண்டால் காமாட்சி நாயக்கன் காணாட்டி பூனைக்கண் நாயக்கன்
கணடதெல்லாம் மஞ்சள் நிறம் காமாலைக் கண்ணனுக்கு
அதிலே ஒரு கண் வச்சுக்கோ
கண்ணிருந்தும் குருடன்
தூண்டிற் காரனுக்கு மிதப்பிலே கண்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைக்கணும்
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கண்ணுக்குத் தெரியாத
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்

நமோ நாராயணாய

நான்செய்த பாவமலை ஏறிவந்தேன்
நாராயணா ஓம் கோவிந்தா
நான்உரைத்த பொய்மலை ஏறிவந்தேன்
நாராயணா ஓம் கோவிந்தா
நான்கொண்ட கோபமலை ஏறிவந்தேன்
நாராயணா ஓம் கோவிந்தா
நான்புரிந்த வஞ்சமலை ஏறிவந்தேன்
நாராயணா ஓம் கோவிந்தா
நான்விரும்பும் ஆசைமலை ஏறிவந்தேன்
நாராயணா ஓம் கோவிந்தா
நான்காட்டும் வெறுப்புமலை ஏறிவந்தேன்
நாராயணா ஓம் கோவிந்தா
நான்விளைத்த தீங்குமலை ஏறிவந்தேன்
நாராயணா ஓம் கோவிந்தா
ஏழுமலை ஏறிவந்து உன்முன் நின்று
இறைச்சுகிறேன் மன்னித்து என்னை ஏற்று
பாழும்இவ் வுடல்கொண்டு மீண்டும் ஏதும்
பாவங்கள் செய்யாமல் காத்தல் வேண்டி
வாழுமுறை எனக்கருளி வாழ்த்து என்று
வணங்குகின்றேன் நாராயணா ஓம்கோ விந்தா

பழி பதினாறு

உதட்டில் கள்ளச் சிரிப்பு
உள்ளத்தில் கடும் கரிப்பு
கண்ணில் குழந்தையின் குறும்பு
கருத்தில் தீராத வெறுப்பு
வார்த்தையில் ஏக தாராளம்
வண்டவாளங்கள் ஏராளம்
முகத்திலே நல்ல நடிப்பு
முதுகுக்குப் பின் ஏளன இடிப்பு
பேச்சில் ஆஹா! தேன் சொட்டும்
பின்னால் ஐயோ! தேள் கொட்டும்
பொய்யெல்லாம் அவன் விடும் மூச்சு
புளுகொன்றே அவனது பேச்சு
மடியெல்லார் பஞ்சு மஞ்சம்
மனதுக்குள் நஞ்சு வஞ்சம்
இவள்தான் என்னுயிர்த் தோழி
எங்கிருந்தாலும் இவள் வாழி!

காதல் குடை

குடையில்லாமல் கோடை வெய்யிலில்
உடல்வியர்க்க நடந்து வந்தேன்
எதிரில் நீ வந்தாய்
என் மேனி குளிர்ந்தது

குடையில்லாமல் கொட்டும் மழையில்
உடல் நனைந்து நடந்து வந்தேன்
எதிரில் நீ வந்தாய்
என்மேனி வெப்பமானேன்